ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம்
ஒட்டுசுட்டான் தான்தோன்றீச்சரம் இலங்கையின் வடபகுதியான வன்னிப் பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு செல்லும் நெடுஞ்சாலையில் ஏறத்தாழ 20 கிலோமீற்றர் தொலைவில் ஒட்டுசுட்டான் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் ஆலயமாகும். இலங்கையில் உள்ள இரண்டு தான்தோன்றீச்சரங்களில் இதுவும் ஒன்றாகும். இவ் ஆலய மூலமூர்த்தியானது யாராலும் உருவாக்கப்படாமல் தானே தோன்றியதால் தான்தோன்றீஸ்வரம் என்றழைக்கப்படுகின்றது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் ஒட்டுசுட்டான் தான்தோன்றீச்சரர் என்றும் எரித்த குரக்கன் ஒட்டுவேகவில்லை என்பதனால் வேகாவனமுடையார் என்னும் காரணப் பெயரும் இவருக்கு உள்ளது. இறைவி பூலோகநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற இத்திருத்தலத்தின் தல விருட்சமாகக் கொன்றை மரமும், தீர்த்தமாக ஆலய தீர்த்தக் கேணி விளங்குகின்றது.